லண்டனில் 30 மேற்பட்ட பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்கள் தடை

 


பிரித்தானியா வால்தம் ஃபாரஸ்ட் பகுதியில் உள்ள 34 பாடசாலைகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதில் 29 ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 5 மேல்நிலை பாடசாலைகள் அடங்கும். குறிப்பாக, ஆரம்பப் மாணவர்கள் மற்றும் 7-ம் வகுப்பில் சேரும் புதிய மாணவர்கள் இந்தத் தடையின் கீழ் வருவார்கள்.

மாணவர்களின் மனநலம் மற்றும் கற்றல் திறனில் ஸ்மார்ட்போன்கள் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தைக் குறைக்கவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிகளின்படி, மாணவர்கள் பாடசாலைக்கு ஸ்மார்ட்போன்களைக் கொண்டு வர அனுமதி இல்லை. அவசரத் தேவைகளுக்காகத் தங்கள் பிள்ளைகளுக்குத் தொலைபேசி வழங்க விரும்பும் பெற்றோர்கள், இணைய வசதி இல்லாத சாதாரண ரக போன்களை மட்டுமே வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மாணவர்கள் சமூக ஊடகங்களின் ஆதிக்கத்திலிருந்தும், இணையதளச் சிக்கல்களிலிருந்தும் விலகிப் பாடங்களில் கவனம் செலுத்த முடியும் என பாடசாலை நிர்வாகங்கள் நம்புகின்றன.

இங்கிலாந்து கல்வித் துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை நேரங்களில் மட்டுமல்லாமல், இடைவேளை மற்றும் மதிய உணவு இடைவேளைகளிலும் மாணவர்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்பறைகளில் தேவையற்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும், மாணவர்களிடையே நேரடிச் சமூகத் தொடர்புகளை அதிகரிக்கவும் இந்தத் தடை ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post