முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கும் செல்லும் இந்திய துணை குடியரசு தலைவர்

 


இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முல்லைத்தீவு, திருகோணமலைக்கும் பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்,எதிர்வரும், ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் நாள்களில் இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அவர்,  திருகோணமலை எண்ணெய்  தாங்கித் திட்டம் உள்ளிட்ட, சிறிலங்காவில் இந்தியாவின் பல்வேறு  திட்டங்களைப் பார்வையிடுவார்.

முல்லைத்தீவு, தெனியாய மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவமனைத் திட்டங்கள் உள்ளிட்ட சிறிலங்காவில் இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் அவர் பார்வையிடுவார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய உடன்பாடுகளும் கையெழுத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது,  அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும்  தமிழ் மற்றும் மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அதேவேளை,இந்தோனேசிய வெளியுறவு பிரதி அமைச்சர் அனிஸ் மட்டா ஏப்ரல் 23-24 ஆம் நாள்களில் சிறிலங்காவிற்கு  அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்வார் என்றும், மாலைதீவின் அதிபர் முகமட் முய்சு மே 4-5 நாள்களில் சிறிலங்காவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post