வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளனர்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் இன்று தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து யாழ் மத்திய கல்லூரி அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்த போதிலும் நெல்லியடி மத்திய கல்லூரி அணியினர் தமக்கு கிடைத்த பல வாய்ப்புகளை கோலாக்க தவறினர்.
இருப்பினும் நெல்லியடி மத்திய கல்லூரி அணி வீரர் கிருஷாண் மிகச் சிறப்பான கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர். இரண்டாவது பாதியாட்டத்தில் யாழ் மத்திய கல்லூரி அணியினர் ஆட்டத்தில் விறுவிறுப்பை காட்டினர்.
இருப்பினும் நெல்லியடி மத்திய கல்லூரி அணி வீரர் கிருஷாண் கொடுத்த பந்தை வகின்சன் கோலாக்க ஆட்ட நேர முடிவில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
நெல்லியடி மத்திய கல்லூரி அணி முதலாவது போட்டியில் மன்னார் இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலயத்தை 7:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியுடனான போட்டியில் தண்டனை உதை மூலம் வெற்றி பெற்று, காலிறுதி ஆட்டத்தில் வயாவிளான் மத்திய கல்லூரி அணியை தண்டனை உதை மூலம் வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர்.
அரையிறுதி ஆட்டத்தில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திலும் யாழ் மத்திய கல்லூரி அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Post a Comment