யாழ்ப்பாணத்துக்கு புதிய ஆயர் நியமனம்

 


யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள், திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளார். 

1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், 2000ஆம் ஆண்டில் கொழும்பு மறைமாவட்டக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 

அதன் பின்னர் பல இடங்களிலும் சமய, கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளை ஆற்றியுள்ளார். இவர் உரோமில் இறையியல் பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும், கொழும்பில் கல்வியியல் டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டார். 

மேலும், ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி மற்றும் முதுகலைமாணி பட்டங்களையும் பெற்றுள்ளார். 

தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்ட இவர், 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 

பின்னர், 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் 19ஆம் திகதி மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகின்றார். 

தற்போதைய யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் ஓய்வு முடிவை அடுத்து, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராகப் பணியாற்றி வந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராகத் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post