கனடாவில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி 3 வடக்கு இளைஞர்களை எத்தியோப்பியாவுக்கு அழைத்துச் சென்று மேற்கொள்ளப்பட்ட ஆள்கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் ஆலோசனையின் பேரில் துபாய் ஊடாக எத்தியோப்பியாவுக்குச் சென்ற இந்த மூவரும், சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றினால் எத்தியோப்பியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்ததுடன், இது குறித்த முறைப்பாடு கடந்த மே 27ஆம் திகதி பதிவாகியிருந்தது.
குறித்த சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார் 64 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளதாகவும், கடத்தப்பட்டவர்களை மீட்க வேண்டும் எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இருந்தும் சுமார் 20 மில்லியன் ரூபா பணத்தை இவரே பெற்றுக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நெடுங்கேணிப் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், உரிய இராஜதந்திர அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். இதற்கமைய, கடந்த ஜூன் 06 ஆம் திகதி எத்தியோப்பிய அதிகாரிகளால் இந்த 3 இலங்கையர்களும் மீட்கப்பட்டனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 4 பாகிஸ்தான் பிரஜைகளும், ஒரு எத்தியோப்பியப் பிரஜையும் இதன்போது கைது செய்யப்பட்டனர். மேலும், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 34 வயதுக்கு இடைப்பட்ட இந்த 3 இலங்கை இளைஞர்களும் கடந்த முதலாம் திகதி மீள நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment