தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லம் அமைந்திருந்த காணியில் இன்று (26) வெகு சிறப்பாக இடம்பெற்றது.
அடைமழைக்கு மத்தியிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அப்பிரதேச மக்கள் ஒன்று திரண்டு தலைவருக்கு கேக் வெட்டியும், இனிப்பு மற்றும் மரக் கன்றுகள் வழங்கியும் பிறந்த தினத்தைக் கொண்டாடினர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை காவல்துறையினர் தலைவருடைய புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் அந்தக் கோரிக்கையினை ஏற்ற மக்கள் தலைவரின் படத்தினை அகற்றிவிட்டு சிறப்பான முறையில் பிறந்த தின நிகழ்வினை நடத்தினர்.
வல்வெட்டித்துறைக்கே உரித்தான பாரம்பரிய உணவான எள்ளுப்பாகு மற்றும் கேக், சொக்லேட் வகைகளும் வந்திருந்த ஆர்வலர்களுக்கு பரிமாறப்பட்டன.
70 ஆவது பிறந்த தினத்தை பிரதிபலிக்கும் வகையில் அவருடைய வீட்டு வளாகத்திற்குள் சிறுவர்கள் மற்றும் பொது மக்களால் 70 மரங்கள் நடப்பட்டன.
இதுமட்டுமல்லாமல் 70 மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் 70 தென்னை மரக்கன்றுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்தாலும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்தும் அங்கு வருகை தரும் மக்கள் தாங்கள் கேக்கை கொண்டு வந்து வெட்டியும், இனிப்புகளையும் பரிமாறி வருகின்றனர்.
இன்று மாலை வரை இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் அறியத் தந்துள்ளனர்.






Post a Comment