புனிதமாக கருதப்பட வேண்டிய மரணத்தின் பின்பு "மறுபிறப்பு" என்பது உண்மையானதா? என்பதனை அறிவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கலாம்.
பூதவுடல் அழிகின்றது. ஆத்மா என்றுமே அழியாது. அது மறுபிறவி எடுக்கும் என பகவத்கீதையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மதங்களும் அதனை வலியுறுத்துகின்றன.
ஞானிகள், யோகிகள், சித்தர்கள், மகா முனிவர்கள் யாவரும் ஆத்மாவின் தொடர்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர். இந்து மதத்தவர்கள் மட்டுமல்லாது உலகம் வாழ் பல்லின மக்களும் அதனை அதீதமாக நம்புகின்றனர்.
எப்படி நம்புவது? அறிவியல் ரீதியாக ஆராய்ந்து விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் முடிவுகள் ஏதாவது உள்ளதா? என்பதே பலரின் கேள்வி.
"முற்பிறப்பில் நான் யார்? " என்பதனை பிறந்து 3 - 5 வயதுக்கும் இடையில் மழலை மொழி பேச தொடங்கும் எங்கேயாவது சில குழந்தைகளிடமிருந்து
* திடீர் என்று அவர்களுக்குள் உருவாகும் கனவுகள்
* தெளிவு பண்ணமுடியாத நிலைமையில் உள்ள அவர்களின் பயங்கள்/ சில சுபாவங்கள்.
* பின்னோக்கி செல்லும் அவர்களின் சிந்தனை பார்வைகள்.
* அவைகள் பற்றி அவர்களின் மழலை மொழியில் உதிர்க்கும் சில சம்பவ கதைகள்.
போன்ற நிலமையில் உள்ள குழந்தைகளை தேடி அமெரிக்காவின் வெர்ஜினா பல்கலைக்கழத்தின் (University of Virginia) உளவியல் மருத்துவ பேராசிரியர் டாக்டர் இயன் ஸ்ரவென்சன் (Dr. Ian Stevenson ) தலைமையில் ஓர் ஆராய்ச்சி குழுவினர் சுமார் 40 வருடங்களாக உலகின் பல நாடுகளுக்கும் நேரடியாக சென்று தங்கள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டனர். இயன் ஸ்ரவென்சன் ஆன்மீக உளவியல் (Parapsychology) என்ற துறையில் நம்பிக்கை உள்ளவர்.
அமெரிக்காவின் வேர்ஜினியா பல்கலைக்கழகத்தின் (University of Virginia - School of Medicine) உளவியல் மருத்துவ பீடத்தில் முற்பிறப்புகள் பற்றி ஆய்வு செய்யும் விசேட பிரிவு (Faculty of Reincarnation) ஓன்று அவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து இயங்கி வருவதனை காணலாம்.
இப்படியாக கடந்த பல வருடங்களாக, பல நாடுகளுக்கும் அவர்கள் பல பல குழுவாக சென்று தங்களின் முற்பிறப்புகள் பற்றி கதைகள் சொல்லும் சுமார் 3000 க்கு மேற்பட்ட குழந்தைகளை நேரடியாக பார்த்து, பல தகவல்களை சேகரித்து அவைகள் யாவும் உண்மையானதா? என்பது பற்றி நீண்டதொரு ஆய்வுகள் நடாத்தி பல நூல்களை வெளியிட்டு உள்ளனர். சுமார் 225 மறுபிறவி நிகழ்வுகளை தேடிக் கண்டறிந்துள்ளார்.
இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில், பல இன மக்களை, மொழி பெயர்ப்பாளர்களின் உதவிகளுடன் சுமார் 3000 க்கு மேற்பட்ட பல குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களை நேரடியாக களத்தில் நின்று எதிர்கொண்டு, அவை பற்றி தங்கள் ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொண்டிருந்தாலும் சிலவற்றினை மட்டுமே அவர்கள் நம்ப தகுந்ததொரு ஆதாரமாக அவர்களின் ஆய்வு கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளனர். இவற்றையெல்லாம் மறுபிறப்பு உயிரியல் என்ற 2,268 பக்கங்கள் கொண்ட இரு புத்தகங்களில் விபரித்துள்ளார்.
(எல்லா குழந்தைகளுக்கும் தங்களின் முற்பிறப்பு தொடர்பான நினைவுகள் வருவதில்லை. குழந்தை ஓன்று 4 - 5 வயதினை கடந்து விட்டால் அவர்களின் முற்பிறப்பு நினைவுகள் மறந்து போய்விடும் என அவர்களின் ஆராய்ச்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது)
சரி . இனி "மறுபிறப்பு" தொடர்பாக ஆங்கிலத்தில் வெளியான அவர்களின் ஓர் ஆராய்ச்சி நிகழ்வு ஒன்றுக்கு வருவோம்.
அமெரிக்காவில் பிறந்த ஜேம்ஸ் லீனிங்கர் (Mas . James Leininger) என்னும் குழந்தை தமது முற்பிறப்பு பற்றி செய்கைகள், நடத்தைகள், வார்த்தைகளில் வெளிக் கொணர்ந்திருந்தது.
இது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் நடந்த ஓர் மரணம்.
பசுபிக் சமுத்திரத்தில் தரித்து நின்ற பாரிய அமெரிக்க யுத்த தாங்கி கப்பலிலிருந்து போர் விமானம் ஒன்றினை எடுத்து சென்ற 21 வயதான திரு.ஜேம்ஸ் ஹஸ்டன் (War Fighter Pilot - Mr.James Huston) என்னும் விமானப்படை போர் வீரன் ஒருவன் யப்பானிய படைவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு காணாமல் போகின்றான்.
அன்று யப்பானிய படைவீர்களால் கொல்லப்பட்ட அமெரிக்கா போர் விமான படை வீரனின் ஆத்மா மீண்டும் சுமார் பல ஆண்டுகளின் பின்பு ஏப்ரல்/10/1998 இல் அமெரிக்காவின் இன்னோர் இடத்தில் மறுபிறவி எடுத்துள்ளது என்பதுவே இங்கு ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப் போகும் கதையாகும்.
இந்தச் சம்பவம் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜிம் துக்கர் (Dr. Jim Tucker) தலைமையில் ஓர் குழுவினர் களத்தில் நின்று ஆய்வு செய்து அது உண்மையான மறுபிறப்பு என்பதனை தங்களின் பல ஆராய்ச்சி நூல்களில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரவென்சன் பிப்ரவரி மாதம் 2007 இல் இவ்வுலகை விட்டு மறைந்தார். இவர் விட்டுச்சென்ற மறுபிறப்பு ஆராய்ச்சி பணியை, அமெரிக்காவில் உள்ள UVA மருத்துவ மைய (University of Virginia Medical Center) மனநல துறையில் பணியாற்றும் இணைப் பேராசிரியரான மருத்துவர் ஜிம் டக்கர் (Dr. Jim Tucker, MD., Ph.D.,) தொடர்ந்து வருகின்றார்.
உயிர் அல்லது ஆன்மா தனது தற்போதைய உடலைத் துறந்த பிறகு, மற்றொரு உடலில் மீண்டும் பிறக்கும் என்பது எமது சமய மற்றும் தத்துவக் கொள்கையாகும். இயன் ஸ்ரவென்சன் தனது ஆய்விலும் மறுபிறப்பு தொடர்பில் பேசிய 70 வீதமான குழந்தைகள் அகாலமரணமடைந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியில் போரின் போது உயிரிழந்த சிப்பாயொருவர் சிங்கள கிராமமொன்றில் மீண்டும் மறுபிறப்பெடுத்து தான் உயிரிழந்த வன்னியின் இடமொன்றுக்கு வந்து சென்றமை தொடர்பிலான கட்டுரையொன்றும் அந்த நேரம் சிங்கள பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி பின் தமிழ் பத்திரிகைகளிலும் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு - சிவ பஞ்சலிங்கம்

.jpg)

.png)

.jpg)
Post a Comment