அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இடமாற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் இன்று(04) காலை 08 மணி முதல் ஆரம்பித்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பினால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
வைத்தியர்களின் இடமாற்ற நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு வாரத்திற்குள் மூன்றாவது தடவையாகவும் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு சென்ற பெருமளவிலான நோயாளர்கள் இன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
தமது பிரச்சினைக்கான தீர்வினை பொறுத்தே நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுமா அல்லது நிறைவு செய்யப்படுமா என்பது குறித்து தீர்மானிக்கப்படுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் பிரபாத் சுகததாஸ தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாதவிட்டால் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவும் தயங்கப் போவதில்லை என இன்றைய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சியடைய இடமளிக்க வேண்டாமெனவும் தமக்கான பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என விசேட வைத்திய நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இந்த பணிப்பகிஷ்கரிப்பானது நிலவும் பேரழிவு சூழலில் ஏற்கனவே துயரப்படும் மக்களை தங்களது அதிகார தேவைகளுக்காகப் பலிகொடுக்கும், மக்களுக்கு எதிரான ஒரு செயலென அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் சட்டப்பூர்வமானவையெனில் நோயாளிகளை பணயம் வைக்காமல் நீதிமன்றத்தை நாடுவதே சரியானதென சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பணிப்பகிஷ்கரிப்பு தொடருமானால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெளிநோயாளர் பிரிவுகள் மற்றும் கிளினிக் சிகிச்சைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 15 மாதங்களில் 15 தடவைகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment