ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கத்தை (115226126) ஒத்த தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பினரால் இவ்வாறான மோசடிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் +94115226126, +0115226126, 0771167739, 0742756098 ஆகிய கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகச் சில தரப்பினர் பொதுமக்களைத் தொடர்பு கொண்டு வருவதும் அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.
அரச இலச்சினையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான செயலி (எப்) ஒன்றினை உருவாக்கி, அதன் மூலம் டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது 'ஈ-அடையாள அட்டை' பெற்றுத் தருவதாகக் கூறி ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தித் தனிப்பட்ட விபரங்களைச் சேகரித்துப் பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஒத்ததாக hitps://drpgov-lk.com எனும் போலியான இணையத்தள முகவரியைப் பயன்படுத்தியும் தகவல்கள் கோரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆட்பதிவுத் திணைக்களத்தினால் இதுவரை டிஜிட்டல் அடையாள அட்டைக்கான எந்தவொரு பதிவுகளும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை அத்திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இவ்வாறான முகந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புகளுக்குத் தமது தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment