பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவகம் 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளமையால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த உணவகம் அதிக தொகைக்கு வாடகைக்கு விடப்படுவதாலேயே யாரும் அதனை பெற்று நடாத்துவதற்கு முன்வருவதில்லை என அறிய முடிகின்றது.
கடந்த வருடம் ரூபாய் 125000/- க்கு மாதாந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், இவ்வருடத்திற்கும் அதே விலை கோரப்பட்டும் யாரும் பெற்றுக் கொள்ளாத நிலையில் மீண்டும் ரூபாய் 80000/- க்கு ஏலம் விடப்பட்டும் எவரும் இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை என பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது விடயமாக வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பலராலும் சுட்டிக் காட்டப்படிருந்த நிலையில் உடனடியாக அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உரிய திணைக்கள அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் பணிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படவில்லை.
இதேவேளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை புதிய கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்பட்டமையால் வைத்தியசாலை உணவகத்திற்கும் நோயாளர் விடுதிக்கும் இடைவெளி அதிகமாக காணப்படுவதாலும் நோயாளர்கள், அவர்களை பராமரிப்பவர்கள் பெரிதும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment