நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதைப் போன்ற ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சி மீண்டும் நிகழாமல் தடுக்க, சிறிலங்கா போராடி வருகிறது. நவம்பரில் ஏற்பட்ட ஒரு கொடிய புயலின் பாதிப்புகளுடன், நீடித்த மத்திய கிழக்கு போரும் சேர்ந்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் போர் சீர்குலைக்கத் தொடங்கியதில் இருந்து, அதிபர் அனுரகுமார திசாநாயக்க எரிபொருளைப் பங்கீடு செய்து, அதன் விலையை மூன்றில் ஒரு பங்கு உயர்த்தி, மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளார்.
சிறிலங்கா மக்கள் பீதியுடன் எரிபொருளை வாங்குவது, கொழும்பு தனது 46 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து, பணவீக்கம் 70 சதவீதத்தை எட்டி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த 2022 ஆம் ஆண்டின் நினைவுகளை, மீண்டும் கொண்டு வந்துள்ளது.
அதனுடன் நடந்த போராட்டங்கள், நிர்வாகச் சீர்கேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள், ஒரு காலத்தில் சக்திவாய்ந்த அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்சவைப் பதவியிலிருந்து கவிழ்த்தன.
ஆனால், ராஜபக்சவைப் பதவியிலிருந்து நீக்கிய அரகலய அல்லது போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய முன்னிலை சோசலிசக் கட்சி அனுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகம் ஒரு உள்வெடிப்பை எதிர்கொள்ளக் கூடும் என்று எச்சரித்துள்ளது.
“இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான பதில் அரசியல் ரீதியாகவே வரும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என முன்னிலை சோசலிசக் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ ஏஎவ்பியிடம் கூறினார்.
“(அரசாங்கத்தின்) ஆணையின் வலிமையால், இந்தப் பொருளாதார அதிர்ச்சி அரசியல் ரீதியாக வெடிக்காமல் மக்களால் இன்னும் உள்வாங்கப்படுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிபர் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, அவரது இடதுசாரி ஜேவிபி கட்சி, 2024 நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது.
‘ஒரு படுகுழிக்குள்’
கொழும்பின் புறக்கோட்டை இரவுச் சந்தையில் வியாபாரம் செய்யும் 55 வயதான வசந்த ஜெயலத், சிறந்த காலங்களை எதிர்பார்த்து 2024-ல் அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்ததாகவும், ஆனால் நிலைமை மோசமடைந்து வருவதாக உணர்வதாகவும் கூறினார்.
“நமது நாட்டிற்கு ஒரு நல்ல, தன்னிறைவு சகாப்தம் விடியும் என்று நினைத்து நாங்கள் வாக்களித்தோம்,” அப்படிப்பட்ட நிலைமை எதுவும் இல்லை; மாறாக, நாடு மேலும் ஒரு படுகுழியில் மூழ்கிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் நாங்கள் உணர்கிறோம்.” என ஜெயலத் ஏஎவ்பியிடம் குறிப்பிட்டார்.
தலைநகரின் பிரதான மொத்த விற்பனைச் சந்தையில் வியாபாரம் செய்யும் 53 வயதான பிரியந்த சுதர்ஷனா சில்வா, இந்த நெருக்கடிக்கு நிர்வாகத்தைக் குறை கூறவில்லை.
“நாடு ஏற்கனவே ஒரு கடினமான நிலையில் இருப்பதால், போராட்டம் உதவாது,” “இந்தச் சிரமங்களுக்கு மத்தியிலும் முன்னோக்கிச் செல்வதே ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று நாங்கள் நம்புகிறோம்.”என்று அவர் கூறினார்.
அவசர நிலை
மக்கள் அன்றாடத் தேவைகளைப் பெறுவதற்கான சவால்களில் மும்முரமாக இருப்பதால், போராட்டங்கள் தணிந்து விட்டதாக மனித உரிமை சட்டவாளர் பவானி பொன்சேகா குறிப்பிட்டார்.
எரிபொருள் பங்கீட்டு முறை வரிசைகளைக் குறைத்துள்ளது, ஆனால் ஏப்ரல் 2 ஆம் நாள், நீர் இருப்பைப் பாதுகாக்கவும், நீரேற்றுச் செலவுகளைச் சேமிக்கவும் அரசாங்கம் நீர் விநியோக நேரங்களைக் கட்டுப்படுத்தத் தொடங்கியது.
“2022-ல் இருந்ததை ஒப்பிடும்போது… அந்த அளவிலான போராட்டத்தை ந இப்போது காணவில்லை,”
சிறிலங்கா டிட்வா புயல் என்ற மற்றொரு பேரழிவிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்த வேளையில், அதைச் சமாளிப்பதற்காக அரசாங்கம் அவசரநிலையை அமுல்படுத்தியது.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும் தடுத்து வைப்பதற்கும் அவசரநிலைச் சட்டங்கள் அதிகாரிகளுக்கு வழங்கும் பரந்த அதிகாரங்கள், எந்தவொரு மக்கள் போராட்டங்களையும் ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்று என்று பவானி பொன்சேகா ஏஎவ்பியிடம் கூறினார்.
இது உரிமை ஆர்வலர்களிடையே கடுமையான கவலைகளை எழுப்புகிறது.
“நாம் ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம்… நடைமுறையில் உள்ள சட்டங்களும், அவை பயன்படுத்தப்படும் விதமும், வரும் வாரங்களிலும் மாதங்களிலும் உரிமைகள் மேலும் சிதைக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்புகின்றன,” என்றும் அவர் கூறினார்.
கொடிய புயல்
2004 ஆசிய சுனாமிக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவான டிட்வா புயல், கடந்த ஆண்டு இறுதியில் 641 பேரைக் கொன்றதுடன், கிட்டத்தட்ட நாடு முழுவதையும் பாதித்தது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தூண்டிய இந்தப் புயலால், உலக வங்கியின் மதிப்பீடுகளின்படி, சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மீட்புப் பணிகளுக்கு நிதியளிப்பதற்காக, 500 பில்லியன் ரூபா கூடுதல் செலவினங்களுக்கான திட்டங்களை அரசாங்கம் டிசம்பரில் அறிவித்தது.
பாதிக்கப்பட்ட வீடுகள், வீதிகள், பாலங்கள் மற்றும் இருப்புப்பாதைகளை மீண்டும் கட்டுவதற்கும், மக்கள் இழந்த வாழ்வாதாரங்களை மீண்டும் பெற உதவும் வகையில் பண உதவி வழங்குவதற்கும் இந்தப் பணம் பயன்படுத்தப்படும்.
பேரழிவின் பின்விளைவுகளைச் சமாளிப்பதற்காக, கொழும்பு டிசம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் (இருந்து 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால நிதியுதவியையும் பெற்றது.
700 மில்லியன் அமெரிக்க டொலர் தவணையை விடுவிப்பதற்கு முன்னர் தனது நான்கு ஆண்டு கால 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் மீட்புக் கடனை ஆய்வு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு ஒன்று தற்போது சிறிலங்காவில் உள்ளது.
வெளிக்காரணிகளால் நாட்டின் பொருளாதாரச் சூழல் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கடனின் சிக்கன நிபந்தனைகளை மாற்றியமைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரக்கூடும் என்று சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் – அமால் ஜயசிங்க
வழிமூலம் – ஏஎவ்பி

Post a Comment